தி வீக்:நாய்களைப் போன்று எங்களைச் சுட முடியும், தமிழர்களைப் பற்றி எவரும் கவலைப்படமாட்டார்கள்'

நாய்களைப் போன்று எங்களைச் சுட முடியும், தமிழர்களைப் பற்றி எவரும் கவலைப்படமாட்டார்கள்'
கிழக்கில் சாய்ந்தமருது கிராமத்தில் நவம்பர் 23 இல் எமது வெள்ளைநிற வான் நிறுத்தப்பட்டபோது அங்குள்ளோர் எம்மை அச்சத்துடன் பார்த்தனர். உள்ளூர் வாசியான எனது நண்பர் "அவர் சென்னையிலிருந்து வந்திருக்கும் பத்திரிகையாளர்' என்று என்னை அறிமுகப்படுத்தினார் என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் "வீக்' சஞ்சிகையின் நிருபர் கவிதா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் வந்து விட்டு சென்றுள்ள கவிதா முரளிதரன், இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து பீதியுடனும் சொந்த மண்ணிலிருந்து தப்பியோடுபவர்களாகவுமே உள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் விபரித்திருப்பதாவது;

வெள்ளை வான்கள் ஆட்களை குறிப்பாக தமிழ் இளைஞர்களை கடத்த பயன்படுத்தப்படுவதாக எனது நண்பர் கூறினார். இந்த மாதிரியான வெள்ளை வான் ஒன்றில் கடந்த ஜூனில் மதுரா குணசிங்கம் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளார்.

எனது மகன், எனது மூத்த மகள் கலாநாயகியுடன் கொழும்பில் தங்கியிருந்தார்.

சகல கதவுகளையும் நான் தட்டிவிட்டேன். (சகல இடங்களிலும் முறையிட்டு விட்டேன்) எனது மகனுக்கு என்ன நடந்தது என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று மதுராவின் தாயார் வேலாயுதம் புஷ்பவல்லி (60 வயது) தெரிவித்தார். அவர் கிளிநொச்சியை சேர்ந்தவர்.

மதுராவின் சகோதரி சிவபாதம் வவுனியாவில் உள்ளார். தனது சகோதரனுக்கு புலிகளுடன் தொடர்பு இல்லையென்று அவர் கூறினார். "எனது சகோதரன் அப்பாவி. வான்சரதியாக அவர் இருந்தார். புலிகளுடன் இருப்பதாக நினைத்து அவர்கள் அவரைக் கொண்டு சென்றிருக்கலாம்.தயவு செய்து அவரை எமக்கு திருப்பி தாருங்கள்' என்று அவர் கூறினார்.

கடத்தப்பட்ட உடனேயே குடும்பத்தினர் பொலிஸாருக்கு அறிவித்தனர். ஆனால், அவர்கள் எதுவும் செய்திருக்கவில்லை. ?செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் அமைப்புகள் என்று ஒவ்வொரு இடங்களுக்கும் சென்றோம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மூன்று தடவைகள் சந்தித்தோம். யார் எனது மகனை கடத்தினார்கள் என்பதும் ஏன் என்பதும் எங்களுக்கு தெரியாது என்று புஷ்பவல்லி கூறினார். வலிமை குன்றியவராக முதிய தோற்றத்தைக் கொண்டிருந்த போதும் அவர் உயிருடன் இருக்கிறார் என்பது நிச்சயம், அவர் திரும்பி வருவார் என்று நம்பிக்கையுடன் அவர் கூறினார்.

ஜெயந்தி கிருஷ்ணனின் கணவன் புஷ்பராஜா கிருஷ்ணகுமார் (34 வயது) கொழும்பில் கடந்த ஜூனில் கடத்தப்பட்டார். "வெள்ளை வானில் அவரின் கடைக்கு வந்த சிலர் அவரை கூட்டிச் சென்றனர்' என்று ஜயந்தி கூறினார். அவருக்கு விகேஷ் என்று இரு வயது மகன் இருக்கிறார். "குடும்ப செலவுக்காக கடையை விற்றுவிட்டேன். கணவன் திரும்பி வராவிட்டால் எனது பிள்ளையுடன் நான் பிச்சையெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூனில் கைது செய்யப்பட்ட முகுந்தா சிவரெட்ணம் (35 வயது) கடையிலுள்ள தனது மனைவியுடன் இணைந்து கொள்வதற்காக காத்திருந்தவராகும். அவரது விதியை நினைத்து தாயார் செல்வஜோதி கவலையுடன் கூறினார். "அவர் லண்டனில் வசித்துக் கொண்டிருந்தார். திருமணப் பதிவுக்காக இங்கு வந்தார். கனடாவிலுள்ள மனைவியிடம் செல்வதற்காக இருந்தார். கம்யூட்டர் படிக்குமாறு நான் கூறினேன். கம்யூட்டர் நிலையத்தில் வைத்து அவர் கடத்தப்பட்டார் என்று தாயார் தெரிவித்தார்.

பொலிஸாரால் கூட்டிச் செல்லப்படுவதாக குடும்பத்தவருக்கு தொலைபேசி மூலம் முகுந்தா தெரிவித்துள்ளார். ஆனால், செல்வஜோதியும் அவருடைய மகள் தர்சினியும் பொலிஸாரை அணுகிய போது கடத்தல் பற்றி தமக்கு அறியவரவில்லையென்று பொலிஸார் கூறியுள்ளனர். இதனை இராணுவம் செய்தது என்பது நிச்சயம். ஏனென்றால், கடத்தப்பட்ட பின்பு விசேட அதிரடிப்படை எமது வீட்டிற்கு இரு தடவைகள் விசாரணைக்காக வந்தது என்று தர்சினி கூறினார்.

முகுந்தாவின் நிலைமை பற்றி அறியாது அண்மையில் கனடிய தூதரகம் மருத்துவ பரிசோதனைக்கு சமுகமளிக்குமாறு அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. "கடிதத்தைப் பார்த்திருந்தால் முகுந்தா அதிக மகிழ்ச்சியடைந்திருப்பார்' என்கிறார் தாயார் செல்வஜோதி. தனது மகன் எக்குற்றமும் இல்லாதவர் என்பதற்கு அத்தாட்சியாக பொலிஸார் வெளிநாடு செல்வதற்கு வழங்கிய "சான்றுப் பத்திரமும்' அவரிடம் உள்ளது. "அவர் ஒரு எளிமையான நபர். ஏன் அவரை எம்மிடமிருந்து பறித்துச் செல்ல வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

தனது மகன் ரொபின்சன் 3 மாதங்களுக்கு முன் கடத்தப்பட்டு பூசா முகாமில் வைக்கப்பட்டிருப்பதை இதயராணி அறிவார். அவரை விடுவிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவரை பார்க்கவும் எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அங்குதான் இருக்கிறார் என்று இதயராணி கூறினார். கப்பம் கேட்கும் அழைப்பு குடும்பத்திற்கு வந்துள்ளது. ஆனால், இதயராணியால் அதனை வழங்க முடியாது.

தமது கைத்தொலைபேசியில் எவராவது இலக்கத்தை வைத்திருந்தால் அவர் புலி உறுப்பினரென அரசு நினைக்கிறது. அவர் கடத்தப்படுகிறார் அல்லது சுடப்படுகிறார் என்று கொழும்பு மாவட்ட எம்.பி.யும் தமிழர்களின் மனித உரிமை விவகாரங்கள் கையாளும் சிவில் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார்.

2008 இல் யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 3000 வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சுமார் 300 கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

கடத்தப்படுவார்கள் அல்லது சுடப்படுவார்கள் என்ற அச்சத்துடனேயே தமிழர்கள் வாழ்கின்றனர். தமது சொந்த இடங்களிலேயே பதிவு செய்ய வேண்டிய துன்ப நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாக அவர்கள் வாழ்கின்றனர். கடந்த 5 வருடங்களுக்குள் கொழும்புக்கு வந்த தமிழர்களை பதிவு செய்யுமாறு அரசு பணித்திருந்தது.

"தமிழ் பேசும் ஒவ்வொரு நபருமே பயங்கரவாதியென அவர்கள் நினைக்கின்றனர். இது அவர்கள் எம்மை நம்பவில்லை' என்பதை காட்டுகிறது என்று ஹோட்டல் ஊழியரான முருகன் கூறினார்.

யுத்தத்தால் பொது மக்கள் பாதிக்கப்படவில்லை என்ற அரசின் அறிக்கைக்கு மத்தியில், மட்டக்களப்பில் 3 ஆயிரம் குடும்பங்கள் முகாம்களில் வாழ்கின்றன. கிழக்கை விடுவிக்கும் நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்தவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாது இருக்கின்றனர். "அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக' இருக்கின்றன என்று பெண் ஒருவர் கூறினார். வன்னிப் பிராந்தியத்தில் உள்ள இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை இன்னும் மோசமாகும்.

யாழ்ப்பாணத்துக்கு செல்வதற்கு அனுமதி பெற நான் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இலங்கை கடவுச் சீட்டு வைத்திருப்போர் அனுமதி பெறுவது சுலபம் என்று சட்டத்தரணி நண்பர் ஒருவர் கூறினார்.

"எனக்குத் தெரிந்த குடும்பமொன்றின் பெற்றோர் பிரிட்டிஷ் கடவுச் சீட்டுகளையும் மகன் இலங்கை கடவுச் சீட்டையும் வைத்திருந்தார். மகன் யாழ்ப்பாணம் சென்றார். ஆனால், பெற்றோரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது' என்று அந்த சிநேகிதி கூறினார். நீங்கள் பாதிக்கப்பட்டால் அதனை உங்கள் அரசாங்கங்கள் பெரிய விவகாரமாக்கிவிடும். ஆனால், இலங்கையில் நாய்களை போன்று எங்களை சுட்டுவிட முடியும். தமிழர்கள் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலும் வன்முறைகளில்லாமல் அமைதி நிலவவில்லை. யுத்த காலத்திலும் பார்க்க சமாதானம் மற்றும் போர்நிறுத்த வேளையிலும் நாம் அதிகளவு துன்பங்களை அனுபவித்தோம் என்று மட்டக்களப்பிலுள்ள தமிழ் எழுத்தாளரான எஸ்.எல்.எம்.ஹனிபா கூறினார்.

நன்றி : http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1835:q---------&catid=35:2008-09-21-04-32-20&Itemid=53

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    உங்கள் தமீழப்பற்றை நன்கு அறிவேன். ஈழ மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் நீங்கள் பல்லாண்டுகாலம் சிறப்பாக வாழ வாழ்த்துவதோடு உங்கள் ஈழக் கனவு 2009இல் நிறைவேற கடுமையாக உழைப்போம்.

    வாழ்க தமிழ்மக்கள்,
    மலர்க தமிழீழம்.

    ஒரு ஈழத் தமிழன்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails