துரோகிகளுக்குத் துரோகம் தரும் பரிசு (!)

துரோகிகளுக்குத் துரோகம் தரும் பரிசு(!)
ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா


உலகில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள், தம்மை அடக்க முயலும் ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்ற அதே வேளையில், தம்மிடையே தோன்றியிருக்கின்ற துரோகிகளுக்கு எதிராகவும் போராடியிருப்பதையும், போராடி வருவதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும், அந்த விடுதலைப் போராட்டத்தை அழிக்க முனைபவர்கள் அடிப்படையாகச் செய்கின்ற காரியம் என்னவென்றால், அந்தப் போராட்டத்திற்குள்ளேயே துரோகிகளையும், துரோகக் குழுக்களையும் உருவாக்குவதுதான்! அதாவது அந்தப் போராடுகின்ற இனத்துக்குள்ளேயே, அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்ற இயக்கத்திற்குள்ளேயே, அந்தப் போராட்டத்தை அழிக்கக் கூடியது போன்ற மாற்றுத் தலைமைகளை உருவாக்குவதும், மாற்றுக் குழுக்களை உருவாக்குவதும், அவற்றின் ஊடாகப் போராட்டத்தை நசுக்க வைப்பதுமான செயற்பாடுகளை எதிரி மேற்கொள்வது வழமையான விடயமாகும்!

இதன் அடிப்படையில்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கும் எதிராக, முன்னர் பல குழுக்கள் உருவாக்கப்பட்டன. விடுதலைப் போராட்டத்தில் யார் வலுவாகவும், தெளிவாகவும் இருக்கிறானோ, அவனுக்கு எதிராக, அவனுக்கு மாற்றாக, வலுக் குறைந்தவனுக்கும், முழுமையான கொள்கைப் பிடிப்பு இல்லாதவனுக்கும், வலுவான ஆயுதங்களைக் கொடுத்து, போராட்டத்திற்குள்ளேயே ஒரு மோதலை உருவாக்குகின்ற செயற்பாடுகள் முன்னர் மேற்கொள்ளப்பட்டன. TELO, EPRLF, PLOT போன்ற அமைப்புக்களைப் போராட்டச் சிந்தனையில் இருந்து பிரித்து, விடுதலைக்கு எதிரான செயற்பாடுகளில் இவைகளை இறங்க வைப்பதில் எதிரி வெற்றி கண்டான். பிறகு இந்த அமைப்புகளில் இருந்தவர்கள் ENLF என்ற அமைப்பை உருவாக்கி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டார்கள். இப்படியாகப் புதிது புதிதாக அமைப்புக்களை உருவாக்குவதும், இவற்றின் ஊடாக விடுதலைப் போராட்டத்தை அழிக்க முனைவதும் எதிரியின் உத்தியாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான துரோகத்தனங்களிலும், காட்டிக் கொடுப்புக்களிலும் பல காலமாகச் சிலர் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றார்கள். அரசியல் தளத்தில் திருவாளர்கள் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான துரோகச் செயல்களைப் புரிந்து வருவதை நாம் காண்கின்றாம். இதில் திரு ஆனந்தசங்கரி தன்னோடு ஒருவரும் இல்லாத தனி மனிதர். டக்ளஸ், சித்தார்த்தன் போன்றவர்கள் சிலரைத் தங்களோடு சேர்த்து வைத்துக் கொண்டு, ஒட்டுக்குழுக்களாகவும் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்களோடு அண்மையில் இணைந்தவர்தான் கருணா!

இங்கே கருணா என்பவர் கிழக்கு மாகாணம் என்ற மிகப் பெரிய பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி என்ற வகையில் பொறுப்பாக இருந்தார். அவருக்குப் போதிய அளவு படைபலமும், படைக்கலங்களும், பின்புல உதவிகளும் தேசியத் தலைமையால் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இவற்றைக் கொண்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதை விட்டுவிட்டு தன்னுடைய சுயநலத்திற்காகத் துரோகியாக மாறிய கருணா, இன்று தானே கையறு நிலையில் இருக்கின்றார். கிழக்கு மகாகாணத் தமிழர்களைக் காக்கப் போகின்றேன் என்று சொல்லிக் கொண்டு புறப்பட்ட கருணாவின் குழுவிற்குள்ளேயே, உடைவு வந்தது. இன்று கிழக்கு மாகாணத் தமிழர்கள் தங்களுடைய சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக, இன்னல் மிக்க வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்கள். தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் வீதிகளுக்குச் சிங்களப் பெயர்கள் சூடப்பட்டு வருகின்றன. மாவீரர் துயிலும் இல்லத்தை சிறிலங்கா அரசபடைகள் உழுது அழித்திருக்கின்றன.

கருணாவோடு சேர்ந்து நின்று போராடி, மாவீரர்களான போராளிகளின் வித்துடல்ளை எதிரி உழுது அழிக்கின்ற போது, கருணா சும்மா பார்த்துக் கொண்டு நிற்கின்றார். சிங்களப் படைகளின் பின்னால் நின்று கொண்டு தன்னுடைய தோழர்களின் வித்துடல்களை "நீ உழு, நான் பார்க்கின்றேன்" என்பது போல் பார்த்துக் கொண்டு நிற்கின்றார். எவ்வளவு கேடு கெட்ட வாழ்க்கையைக் கருணா வாழ்ந்து வருகின்றார்!

போராளிகளின் மறைவு, விதைப்பு என்பவற்றை உலகம் மரியாதையோடு கௌரவத்தோடு பார்க்கின்றது. 1917ம் ஆண்டு முதலாவது உலக மகா யுத்தத்தில் நேசநாடுகள் சார்பில் அவுஸ்திரேலியாவும் சேர்ந்து போராடியது. பெல்ஜியத்தில் (PASSCHENDAELE என்ற இடத்தில்) மிகக் கடுமையான சண்டை நடந்தது. அவுஸ்திரேலியாவிலிருந்து சென்றிருந்த போர்வீரர்களில் ஜக் ஹன்டர் (JACK HUNTER), ஜிம் ஹன்டர் (JIM HUNTER) என்ற இரு சகோதரர்களும் இச் சண்டையில் இணைந்து பங்கு பற்றினார்கள். இந்தக் கடுமையான சண்டையில், சகோதரர்களில் மூத்தவரான ஜக் ஹன்டர் வீரச் சாவடைகின்றார். தனது தமையனை அந்தப் போர்க்களத்திலேயே அடக்கம் செய்து விட்டுச் சண்டையைத் தொடர்கின்றார், அவரது தம்பி ஜிம் ஹன்டர். சண்டை முடிந்தபின்பு, தனது தமையனாரின் புதைகுழியை அந்த யுத்த மயானத்தில் தம்பி தேடியலைந்தார். ஆனால் மிகக் கடுமையான பீரங்கிக் குண்டுத் தாக்குதலினால் இறந்துபோய் புதைக்கப்பட்ட வீரர்களின் உடல்கள் சின்னாபின்னமாகிய காரணத்தால், தனது தமையனின் உடலை தம்பி ஜிம்மினால் கண்டு பிடிக்க முடியவில்லை. உடைந்த உள்ளத்தோடு நாடு திரும்பிய தம்பி ஜிம் ஹன்டர், 1977ம் ஆண்டு தன்னுடைய 86வது வயதில் தன்னுடைய அண்ணனின் பெயரைச் சொல்லியவாறே தன் உயிரை நீத்தார்.

ஆனால் இந்த 2007ம் ஆண்டு - அதாவது 90 ஆண்டுகளுக்குப் பின்னால் - தமையனார் ஜக் ஹன்டரின் உடல், மரபணுச் சோதனை உதவி மூலம் (DNA TEST) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஜக் ஹன்டரின் மருமகளான மோலி மில்லிஸ் (MOLLIE MILLIS) என்பவரின் - இவருக்கு இப்போது 81வயது - மரபணு உதவியுடன் ஜக் ஹன்டரின் சிதிலமடைந்த உடல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த ஒக்டோபர் மாதம், பெல்ஜியம் போர் மயானத்தில், முழு இராணுவ மரியாதையோடு, ஜக் ஹன்டரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

எங்கோ ஒரு வேற்று நாட்டில், 90 ஆண்டுகளுக்கு முன் உயிர் துறந்த, தமது நாட்டுப் போர் வீரனின் உடலைக் கௌரவமாக நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக அவுஸ்திரேலிய அரசும், போர்வீரனின் உறவுகளும் மேற்கொண்ட சலிக்காத முயற்சியை ஓர் உதாரணத்திற்காக நாம் இங்கே சுட்டிக் காட்டினோம். ஆனால், தனது சொந்த மண்ணில் தன்னோடு சேர்ந்து போராடிய மாவீரர்களின் வித்துடல்களை, இன்று, தான் கைகோர்த்துச் சேர்த்திருக்கும் இராணுவம் உழுது தள்ளியபோது "சும்மா" பார்த்துக் கொண்டு நின்ற கருணாவின் மனச்சாட்சி எங்கே? ஒரு துரோகி என்பவன் எவ்வளவு கீழ் நிலைக்குப் போவான் என்பதற்கு இன்றைய குறியீடு கருணாதான்!

இந்தத் துரோகிகளுக்கு இருக்கின்ற அடிப்படையான விடயம் சுயநலமே தவிர வேறு ஒன்றுமில்லை. என்ன நடக்கப் போகின்றது என்று கருணாவிற்கு மிக நன்றாகத் தெரியும். அவர் ஒரு அரசியல் கற்றுக் குட்டியும் அல்ல! ஒன்றும் தெரியாத அப்பாவியும் அல்ல!

இங்கே யதார்த்த நிலை என்னவென்றால் கிழக்கு மகாகாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருக்கும் வரைக்கும், துரோகச் செயல்களுக்காக கருணா சிறிலங்கா அரசாங்கத்திற்குத் தேவைப்படுவார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், கிழக்கு மாகாணம் இல்லை என்று சொன்னால், கருணாவும் அரசாங்கத்திற்குத் தேவையில்லை. இதன் ஊடேயும், கருணாவிற்கு எதிராகப் பிள்ளையான் அணி போன்ற பல அணிகளைச் சிறிலங்கா அரசு உருவாக்கும்.

தமிழர்களின் போராட்டத்திற்கு விரோதமாக, துரோகமாகச் செயற்படுகின்றவர்கள் யாவருமே - அது ஆனந்தசங்கரியாக இருக்கலாம் - டக்ளஸ் தேவானந்தவாக இருக்கலாம் - சித்தார்த்தனாக இருக்கலாம் - கருணாவாக இருக்கலாம் - இவர்கள் எல்லோருமே தங்களது தங்கு நிலையை, சிறிலங்கா அரசிடம்தான் வைத்திருக்கின்றார்கள். அதாவது யார் தமது அடிப்படை உரிமைகளைத் தர மறுக்கின்றார்களோ அவர்களிடம்தான் இவர்கள் தங்கி நிற்கின்றார்கள்.

அதாவது இந்தத் தமிழ்த் துரோகிகளின் வாழ்க்கை என்பது, தமிழர்களின் விரோதிகளின் கைகளில்தான் உள்ளது. இன்றைய தினம் எதிரி இவர்களைக் கைவிட்டால், இவர்களுக்கு இந்த வாழ்க்கையும் இல்லாது போய்விடும். இவர்களுக்கு அண்டியும் வாழ முடியாத, சுயமாகவும் வாழமுடியாத நிலைதான் விரைவில் ஏற்படும். ஏனென்றால் இவர்களுக்குச் சுயமாக வாழக்கூடிய திராணியும் இல்லை.

துரோகத்தனம் என்பது துரோகிகளுக்கு ஒரு முறையான, நேர்மையான வாழ்வைத் தரப் போவதில்லை. சில நாட்களுக்குச் சில வசதிகளைத் துரோகத்தனம் தற்காலிகமாகப் பெற்றுத் தரலாம். ஆனால் இது நிரந்தரமான, நிம்மதியான, உண்மையான வாழ்வு அல்ல! துரோகிகளுக்கு மட்டுமல்ல, அந்தத் துரோகிகளை நம்பியிருப்பவர்களுக்கும் துரோகத்தனம் ஒரு முறையான வாழ்வைத் தரப்போவதில்லை. அதாவது துரோகிகளும் வாழப் போவதில்லை. துரோகிகளை நம்பியவர்களும் வாழப் போவதில்லை. தாங்களும் முறையாக வாழாதது மட்டுமல்லாது, தங்களுடைய இனத்திற்குத் தேவையற்ற ஓர் அழிவை ஏற்படு;த்துவதற்குத்தான் துரோகிகள் துணை போகின்றார்கள்.

அதாவது எந்த இனத்திற்காகத் தாங்கள் பேசுகின்றோம், பாடுபடுகின்றோம் என்று இந்தத் துரோகிகள் சொல்கின்றார்களோ அந்த இனத்தின் அழிவுக்காகத்தான் இவர்கள் செயற்படுகின்றனர். இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டபோது, இவர்கள் பயனற்றுத்தான் போனார்கள்.

ஒரு தர்க்கத்திற்காகக் கருத்தொன்றைச் சொல்ல விழைகின்றோம். இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லையென்றால், சிறிலங்கா அரசிற்கு ஆனந்தசங்கரியும் தேவையில்லை, டக்ளசும் தேவையில்லை, சித்தார்த்தனும் தேவையில்லை, கருணாவும் தேவையில்லை. அதாவது மறுவழமாகப் பார்த்தால் ஆனந்தசங்கரியும், சித்தார்த்தனும், டக்ளசும், கருணாவும் அரசு தயவால் சொகுசாக வாழ வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் பலமோடு இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது அல்லவா? இங்கே என்ன முரண்நிலை என்றால், பொதுவாக எந்தப் பலத்தை இவர்கள் அழிக்க முனைகின்றார்களோ அந்தப் பலம் அழிந்தால், இவர்களுடைய சொந்த வாழ்க்கையும் அழிந்து போய்விடும் என்பதுதான்!

அதாவது இவர்கள் தங்களுடைய துரோகத்தனத்தால் காட்டிக் கொடுக்கின்ற விடுதலைப் போராட்டம் தோற்றுப் போனாலும் இவர்கள் வாழ முடியாது, அந்த விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றாலும் இவர்களால் வாழமுடியாது. இதுதான் துரோகம் தருகின்ற வித்தியாசமான பரிசு!

இன்றைக்கு இவர்கள் தற்காலிகமாகத் துள்ளிக் கொண்டு திரியக்கூடும். ஆனால் வரலாறு இவர்களை துரோகிகள் என்றுதான் பதிவு செய்யும். அப்போது இவர்களது வாரிசுகள்கூட இவர்கள் பெயரைச் சொல்ல வெட்கப்பட்டுக் கூசக் கூடும்.

1939ம் ஆண்டு, நோர்வே நாட்டின் முக்கிய இராணுவ அதிகாரியான விட்கன் குயிஸ்லிங்க் (VIDKUN QUISLING) என்பவர், ஹிட்லரைச் சந்தித்து தன்னுடைய நாடான நோர்வேயைக் கைப்பற்றும்படி தூண்டுகின்றார். 1940ம் ஆண்டு ஹிட்லரின் ஜேர்மன் படைகள் நோர்வேயை ஆக்கிரமித்து, குயிஸ்லிங்கைத் தம்முடைய பொம்மை அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கின்றன. ஆனால் குயிஸ்லிங்கின் துரோகம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. நோர்வே 1945ம் ஆண்டு சுதந்திரமடைந்தபோது, குயிஸ்லிங்க் கைது செய்யப்பட்டு, நாட்டுத் துரோகத்திற்கான மரண தண்டனையைப் பெறுகின்றார்.

இங்கே சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், 1940ம் ஆண்டளவிலேயே, அதாவது குயிஸ்லிங்க் உயிரோடு இருந்த வேளையிலேயே, அவருக்குத் துரோகிப் பட்டம் சூட்டப்படுகின்றது. மக்கள் துரோகி என்ற சொல்லுக்குப் பதிலாக "குயிஸ்லிங்க்" என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள். வின்ஸ்டன் சேர்ச்சில் போன்றவர்களும் துரோகி என்ற சொல்லுக்குப் பதிலாக "குயிஸ்லிங்க்" என்ற சொல்லையே பயன் படுத்தினார்கள் இன்று ஆங்கில அகராதியை வாசகர்கள் பார்த்தால் குயிஸ்லிங்க் (QUISLING) என்ற சொல்லுக்குத் "தேசத்துரோகி" என்றுதான் அர்த்தம் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தேசத்துரோகி என்கின்ற வரைவிலக்கணத்தையோ, "விருதையோ" பெறுவதற்காகக் கடும் போட்டிகள் நிலவக் கூடும். அண்மைக் காலச் சாதனையாளர்களான ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன், கருணா போன்றவர்களில் எவர்தான் தேசத்துரோகிக்கான அர்த்தத்தை அகராதியில் அலங்கரிக்கப் போகின்றார்கள் என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்!

தமிழர்களுக்குத் துரோகிகள் என்ற பதம் புதிதல்ல! எட்டப்பன், காக்கை வன்னியனுக்கும் அப்பால் பல பெயர்கள் உள்ளன. துரோகத்தால் வரக்கூடிய சீர்கேடுகள் குறித்துச் சொல்வதற்காகப் பாண்டியப் பேரரசு ஒன்று வீழ்ந்த வரலாற்றையும் சொல்லலாம். சோழப் பேரரசு வீழ்ந்த பின்பு மீண்டும் பாண்டியப் பேரரசு கிபி 1257ஆண்டளவில் மிகப் பெரிய எழுச்சியைக் கொள்கின்றது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1270) மிகச் சிறந்த வலிமை வாய்ந்த வீரனாக இருந்த காரணத்தால் பாண்டியப் பேரரசு மிகப் பெரிய அரசாக விரிகின்றது. இவனுக்குப் பின் அரசாண்ட மாறவர்மன் குலசேகரபாண்டியன் (1268-1311) இலங்கைமீது படையெடுத்து பல வெற்றிகளை அடைகின்றான். இவன் கைப்பற்ற்pய பொருட்களில் புத்தரின் பல் என்று சொல்லப்படுகின்ற சின்னமும் ஒன்றாகும். இவனை எதிர்த்துப் போராடமுடியாத அன்றைய இலங்கை மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகு 1304ம் ஆண்டு பாண்டியனைப் பணிந்து வேண்டி புத்தரின் பல் சின்னத்தைப் பெற்றுக் கொண்டதாக வரலாறு கூறுகின்றது,

ஆனால் மாறவர்மன் குலசேகரபாண்டியனின் பிள்ளைகளான சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் தமக்குள் மோதிக் கொண்ட காரணத்தால் சுந்தரபாண்டியன் தில்லியை ஆண்ட பேரரசன் அலாவுதீனின் உதவியை நாடினான். அவன் தனது படைத்தளபதியான மாலிக்கபூரை தமிழ் நாட்டிற்கு அனுப்பினான். இந்த மாலிக்கபூர் தென்னாட்டின் அரசுகளான தேவகிரி யாதவர், துவார சமுத்திரத்து ஹொய்சளர், பாண்டியர் ஆகிய எல்லா நாடுகளையும் கடந்து இராமேஸ்வரம் வரை கொள்ளையடித்துச் சென்றான். 612 யானைகள், 3,583 டன் எடையுள்ள தங்கம் (96,000 மணங்கு), 20,000 குதிரைகள், யானை குதிரைகள் மீது ஏற்றிச் செல்லப்பட்ட முத்து அணிப்பெட்டிகள் பல்லாயிரம் என்று அக்கால வரலாற்று ஆசிரியர்கள் இக் கொள்ளை பற்றி எழுதினார்கள்.

இங்கே வரலாறு சொல்கின்ற படிப்பினை என்னவென்றால், "தேவையற்ற தலையீட்டைக் கொண்டு வராதீர்கள்" என்பதேயாகும்! தமிழர்களின் நீண்ட கால வரலாற்றில் (தமிழ் நாடு - இலங்கை) இந்தத் துரோகத் தனங்களுக்கு ஊடாகத் தமிழர்களுடைய பேரரசுகள் அழிந்து போயுள்ளதை நாம் காண்கின்றோம். ஆனால் தமிழீழச் சுதந்திரப் போராட்டம் என்பதானது இங்கே வித்தியாசமானதாக இருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

துரோகத்தனங்களுக்கு ஊடாக, இந்தத் துரோகத்தனங்கள் வெல்ல முடியாத அளவிற்குத் தலைநிமிர்ந்து நிற்பது தமிழீழ விடுதலைப் புலிகள்தான்! குறுகிய பலத்தோடும், குறைந்த வளங்களோடும் இருந்தாலும் அதற்குள்ளாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தக்க வைத்து நகர்த்திச் சென்று, தலை வணங்காமல் நிற்பது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்தான்!

காலம் காலமாக ஆக்கிரமிப்பாளர்கள் உருவாக்கி வந்த துரோகக் கும்பல்களின் செயற்பாடுகள் இன்றுவரை தொடர்ந்தும் நடைபெறுகின்றன. காலம் காலமாக காக்கை வன்னியர்கள் போன்றோர் செய்த இனத் துரோகங்களைத்தான் இன்றைய தமிழினத் துரோகிகளும் செய்கின்றார்கள். இந்தத் தமிழினத் துரோகத்திற்குத் துணை போவதற்கென்றே ஊடகங்களும் உருவாகியிருக்கின்றன. இவையெல்லாம் காலம் காலமாக நடந்த, நடக்கின்ற விடயங்கள்தாம்! ஆனால் காலம் காலமாக நடக்காத, நடந்திராத விடயம் ஒன்று இப்போது நடக்கின்றது. அது தமிழர்கள் வலுவோடு, பலமாக உறுதியான தலைமையோடு இன்று இணைந்திருப்பதுதான்! காலத்தையே மாற்றுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் தமிழினம் இருக்கின்றபோது காலம் காலமாக நடைபெற்று வந்த வஞ்சகங்களும், துரோகங்களும் இனியும் வெற்றி பெறாது. இதனை முழுமையாகச் செய்து காட்ட வேண்டிய கடமை உலகத் தமிழினத்திற்கு உள்ளது.

பழைய தமிழ் அரசுகள் ஓரளவிற்குத் தன்னலம், தன் குடும்பம், தன் வாரிசு, தன் பரம்பரை சார்ந்து இருக்கும். அவை தனிப்பட்ட குடும்பங்கள், அவற்றினூடாகத் தொடர்ச்சியான ஆட்சியின் அரசு என்ற வகையில் அமைந்திருந்தன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அவ்வாறு அமைந்தது அல்ல!

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது ஒரு மக்கள் அமைப்பாகும். பல்லாயிரக்கணக்கான போராளிகளின், பொதுமக்களின் உயிர்த் தியாகத்தாலும், குருதியாலும் வளர்க்கப்பட்ட இயக்கம்தான் விடுதலைப் புலிகள் இயக்கம்! இது மக்கள் அமைப்பாக இருப்பதனால் இதனுடைய தோல்வி மக்களின் தோல்வியாகவே அமையும். அரசனின் தோல்வியோ, தனி அரசனின், ஒரு குடும்பத்தின் தோல்வியாக அமையும்.

அதாவது,

புலிகளுக்கு எதிரான காட்டிக் கொடுப்பு, தமிழர்களுக்கு எதிரான காட்டிக் கொடுப்பாகும்!

புலிகளுக்கு எதிரான துரோகம் தமிழர்களுக்கு எதிரான துரோகமாகும்!

இந்தத் தமிழ்த் துரோகிகளின் காட்டிக் கொடுப்பும், துரோகத்தனமும் தனக்கு எதிரான காட்டிக்கொடுப்பு, தனக்கு எதிரான துரோகம் என்பதை ஒவ்வொரு தனிமனிதனும் விளங்கிக் கொண்டால், அவர்களுக்கு எதிராக எல்லோரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று புரிந்து கொண்டால், இந்தத் தமிழ்த் துரோகிகளை புறக்கணிப்பதுவும், முற்றாக ஒதுக்குவதும் எளிதாகிவிடும். இந்தப் பணியைச் செய்வதன் மூலம் தமிழர்களாகிய நாம் தலை நிமிர்ந்து நிற்க முடியும். நாம் முன்னர் கூறியது போல், இந்தத் துரோகிகளுக்கு உரிய பரிசை அவர்களுடைய துரோகத்தனமே விரைவில் வழங்கி விடும்!

Posted in |

2 comments:

 1. Thaarani Says:

  துரோகிகளுக்கு உரிய பரிசை அவர்களுடைய துரோகத்தனமே விரைவில் வழங்கி விடும்!

  /* It's true......ivanukalai patri kathaikirathe waste.......

 2. karivendhan Says:

  Ithaip padiththa udanae en ninaivukku varum manithan thamizh naattin arasiyal kalaththil ulavi varum oru pachchai dhurigiyaip patrithaan! Thamizhi inaththaiyae adiyodu veezhthap purapppattiru
  kum oru chandaaliyudan kai koarthu nirkum andha duroagiyai adayaalam
  kandu kollungal! echcharikkayudan
  irungall!

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails