ஈவு இரக்கமற்ற சிங்கள அரசு சித்ரவதைப்படுத்தியே பெரியவர் தலைவரின் தந்தை வேலுப்பிள்ளையை கொன்றிருக்கிறது!

"ரத்த உறவுகள் யாராவது கோரினால்... பிரபாகரனின் பெற்றோரை அனுப்பி வைக்கத் தயார்!'' என சமீபத்தில் அறிவித்தது சிங்கள அரசு. இதற்கான முயற்சிகளை உலகத் தமிழர்கள் பலரும் முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில்... திடீரென, ஜனவரி 7-ம் தேதி காலையில் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளை இறந்துவிட்டதாகச் சொல்லி, ஈழ ஆர்வலர்களின் இதயங்களில் இன்னுமொரு சோகத்தை விதைத்திருக்கிறது சிங்கள அரசு! 

ஈழப் போர் முடிவுக்கு வந்த கடந்த மே மாதம் 16-ம் தேதிவாக்கில் மக்களோடு மக்க ளாக சிங்கள முகாமுக்கு பிரபாகரனின் பெற் றோரான வேலுப்பிள்ளையும் பார்வதியும் வந்தார்கள். அங்கு புலிகள் கலந்திருக்கிறார்களா என ராணுவம் துருவியெடுத்தபோது, தாங்களே முன்வந்து, 'நாங்கள்தான் பிரபாகரனின் பெற்றோர்' என அவர்கள் சரணடைந்தனர். அவர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்த சிங்கள அரசு, கொழும் பிலுள்ள அரசுக் கட்டடத்தின் 'நான்காம் மாடியில்' வைத்து விசாரணை நடத்தியது. அதன் பிறகு அவிசாவளை ஏரியாவில் இருக்கும் பனாகொடா முகாமில் அவர்களைத் தங்க வைத்ததாகவும், அப்போது உடல்நலமில்லாமல் வேலுப்பிள்ளை இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறது சிங்கள அரசு.

ஆனால், ''விசாரணை என்கிற பெயரில், ஈவு இரக்கமற்ற சிங்கள அரசு சித்ரவதைப்படுத்தியே பெரியவர் வேலுப்பிள்ளையை கொன்றிருக்கிறது!'' என ஆவேசமும் ஆதங்கமுமாகச் சொல்கிறார் வைகோ.

''புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் பெற்றோர் அங்கம் வகிக்கவில்லை. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனா லும் அவர்களைப் புலிகளின் பிரதிநிதிகள் போல கைது செய்து கொடூரம் காட்டியது சிங்கள அரசு. 86 வயது வேலுப்பிள்ளையை சிங்கள அரசு அணு அணுவாகச் சித்ரவதைப்படுத்தி வந்தது. வயதானாலும் அவருக்குப் பெரிதாக எந்த வியாதியும் இல்லை. போர் மரபும் மனசாட்சியும் இருந்திருந்தால் பிரபா கரனின் பெற்றோரை கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினியிடம் ஒப்படைத்திருக்கலாமே... இந்நிலையில், உலகமே வேடிக்கை பார்க்க... அந்தப் பெரியவரை கொன்று போட்டிருக்கிறார்கள். அவரைப் போலவே பால குமாரன், கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட சாலச் சிறந்த மூத்தவர்களையும் இனவெறியோடு சிங்கள அரசு சித்ரவதைப்படுத்தி வருகிறது!'' என வெடித்த வைகோ, வேலுப்பிள்ளை உடனான தனது நினைவுகளையும் ஈரமான கண்களோடு நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

''எங்கள் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும், முசிறியிலிருந்து வந்து பிரபாகரனின் பெற்றோர் அதில் தவறாமல் கலந்து கொள்வார்கள். என் மூத்த மகள் ராஜலெட்சுமியின் மகனுக்கு பெயர் வைக்க வேலுப்பிள்ளையை அழைத்திருந்தோம். வாஞ் சையாகக் கொஞ்சியபடி 'பிரபாகரன்' என பெயர் சூட்டினார். மகனைப் பற்றிய பெருமிதம் அவரிடத்தில் எப்போதுமே இருக்கும். முசிறியில் அவர் தங்கியிருந்தபோது, அடிக்கடி பார்க்கச் செல்வேன். யாரிடமும் எப்போதும் 'உதவி' என்கிற வார்த்தையைக்கூட கேட்டுவிட மாட்டார். எப்போதும் அவருக்குப் பக்கத்திலேயே இருப்பார் பார்வதி அம்மாள்.
மகனைப் பார்க்காமல் எத்தனையோ வருடங்கள் பிரிந்திருந்தாலும் நாங்கள் பார்க்கும் போதெல்லாம், 'பிரபாகரனை எங்களுக்கு சொந்தமான பிள்ளைன்னு மட்டும் நினைக்க முடியாது. பிரபாகரனை நம்பி ஒரு நாடே இருக் குப்பா...' என பெருமிதத்துடன் சொல்வார் வேலுப்பிள்ளை. முசிறியில் தங்கியிருந்த அந்தத் தம்பதிக்கு இலங்கையில் போர் ஆரம்பித்தவுடன் இருப்புக் கொள்ளவில்லை. 'அங்கே எங்க புள்ளையை நம்பி எல்லோரும் இருக்கையில்... நாங்கள் இங்கு இருப்பது முறையில்லை' எனச் சொல்லித்தான் ஈழத்துக்குக் கிளம்பிப் போனார்கள். போரின் தீவிரம் கடுமையானபோதுகூட தன் பெற்றோருக்காகவோ பிள்ளைகளுக்காகவோ பிரபாகரன் எவ்விதத் தனித்துவ வசதிகளையும் செய்யவில்லை. ஈழத்தில் இருந்த எல்லோரையும் போலவேதான் அவர்களையும் நினைத்தார். வேலுப்பிள்ளையையும் பார்வதி அம்மாளையும் தப்ப வைக்க நினைத்திருந்தால், சுலபமாக அவர் அதை நிறைவேற்றி இருக்க முடியும். ஆனால் அதைச் செய்ய பிரபாகரன் விரும்பவில்லை. வேலுப்பிள்ளைக்கும் அப்படி தப்பிச் செல்வதில் விருப்பம் இல்லை. அதனால்தான் உக்கிரமான போரிலும் அவர்கள் மக்களோடு மக்களாகவே இருந்தார்கள். ஒரு போதும் கணவரைப் பிரியாத பார்வதி அம்மாள் சிங்கள ராணுவம் கைது செய்யும் நிலையிலும் கணவரின் கையைப் பிடித்தபடியேதான் நின்றிருக்கிறார். அந்த ஜீவன் எப்படியெல்லாம் துடிதுடிக்கப் போகிறதோ?'' என்றபோதே வைகோவுக்கு குரல் உடைந்து போனது.

வேலுப்பிள்ளையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசிடம் அனுமதி கேட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரான திருமாவளவனிடம் பேசினோம். ''பிரபாகரனின் பெற்றோரை இலங்கையிலிருந்து மீட்பதற்காக பசில் ராஜபக்ஷேயிடம் தொடர்ந்து பேசி வந்தேன். பிரபாகரனின் சகோதரியான விநோதினி மூலமாக கனடாவில் உள்ள இலங்கை தூதரகத்திடமும் கோரிக்கைக் கடிதம் கொடுக்க வைத்தேன். அதற்கு இலங்கை தூதரகம் எவ்வித பதிலையும் சொல்லவில்லை. கடந்த இரண்டாம் தேதி கொழும்பு போயிருந்தபோது, பசில் ராஜபக்ஷேவிடம் மீண்டும் பேசினேன். 'பிரபாகரனின் பெற்றோரை இந்தியா தவிர்த்து வேறெந்த நாட்டுக்கும் அனுப்ப மாட்டோம்' என ஆரம்பத்தில் ரொம்பவே பிடிவாதம் காட்டிய பசில், ஒரு கட்டத்தில் கனடாவுக்கு அனுப்பவும் ஒப்புக் கொண்டார். அவர்களுக்குத் தேவையான விசாவையும் எடுக்கச் சொன்னார். சில முக்கிய நபர்களின் மூலமாக அதற்கான முயற்சிகளிலும் இறங்கினோம். இந்த நிலையில்தான் திடீரென வேலுப்பிள்ளை இறந்துவிட்டதாகச் சொல்லி இடியை இறக்கி இருக்கிறது சிங்கள அரசு. இத்தனை முயற்சிகளை எடுத்தும் ஒரு மாவீரனின் தந்தையைக் காப்பாற்ற முடியவில்லையே என்பதை நினைக்கிறபோதே நெஞ்சு வெடிக்கிறது!'' என்றவர்... கொஞ்சம் இடைவெளிவிட்டு,

''வேலுப் பிள்ளையை ஓர் அநாதைப் பிணம் போல புதைத்துவிடக் கூடாது என சிங்கள அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். அவருடைய உடலையாவது சிங்கள அரசு, தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் மிகுந்த மரியாதையோடு அவருடைய இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறேன். இதற்கிடையில் பிரபாகரனின் தாயாரையும், மாமியாரையும் இப்போதாவது இலங்கையிலிருந்து அனுப்ப சிங்கள அரசு மனசு வைக்க வேண்டும்!'' என்றார் இறுக்கமான முகத்தோடு.

இதற்கிடையில் கனடாவில் இருக்கும் பிரபாகரனின் சகோதரி வினோதினியும் தன் தந்தையின் உடலை தமிழ் எம்.பி.யான சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்கும்படி இலங்கை தூதரகத்திடம் கோரியிருக்கிறாராம். சிவாஜிலிங்கமோ, ''நேர்மையான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டால்தான் வேலுப்பிள்ளையின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது உலகுக்குத் தெரியும். வேலுப்பிள்ளையின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் அவருக்கு இறுதிக் கிரியைகள் செய்ய சிங்கள அரசு அனுமதிக்க வேண்டும்!'' எனச் சொல்லி இருக்கிறார்.

''நான் இறந்துபோனால் வல்வெட்டித் துறையில் உள்ள சோனப்பு சுடலையில்தான் என்னை எரியூட்ட வேண்டும்!" என்று ஒரு கடிதமாகவே எழுதி வைத்திருந்தார் பிரபாகரனின் தந்தை. இது ஒரு புறமிருக்க, ''வேலுப்பிள்ளை எனக்குத் தந்தை போலத்தான். சிறுவயது தொட்டே அவரது அன்பு எனக்கும் கிடைத்திருக்கிறது. அவருடைய இறுதிச் சடங்கில் நான் கலந்துகொள்ள அனுமதியுங்கள்!" என்று இலங்கை அரசிடம் 'பர்மிஷன்' கேட்டாராம் பிரபாகரனின் கோபத்துக்கு ஆளான கருணா!

பிரபாகரனின் தந்தை இந்தியாவுக்கு வந்திருந்தால், 'இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த உண்மைகள் வெளிவந்திருக்குமே' என்ற ஆதங்கம் தமிழுணர்வாளர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

-இரா.சரவணன்
=========

நன்றி: ஜூனியர் விகடன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails