தமிழகத்தின் ஈழத்தமிழர் ஆதரவு அலையை கருணாநிதியால் கூட இனித் தடுக்கமுடியாது
Posted On Monday, 1 December 2008 at at 05:06 by Mikeதமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் ஆதரவு உணர்வலை மிக வேகமாகப் பரவி வருகிறது எனவும், தமிழக முதலமைச்சரால் கூட அதனைத் தடுத்து நிறுத்த முடியாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
தமிழ் நாட்டின் கிராமப் பகுதிகளில் வலுவாகவுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, யுத்தநிறுத்தம் குறித்து தீவிர அழுத்தத்தைக் கொடுத்து வருவதாகவும் தமிழ் நாட்டில் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடினார். அதன்போது தமிழ் நாட் டில் காணப்படும் உணர்வலைகள் குறித்து இருவரும் ஆராய்ந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டிற்கான சமீபத்தைய விஜயத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் பயணம் செய்த வாகனம் அரசியல் கட்சிகளின் தொண்டர்களால் வழிமறிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.
குறிப்பிட்ட வீதி மறியல் போராட்டத்தை யார் மேற்கொண்டார்கள்? மற்றும் எவ்வாறான கோஷங்கள் எழுப்பப்பட்டன? போன்ற விவரங்களை ஜனாதிபதி தொலைபேசி உரையாடலின்போது கேட்டறிந்துள்ளார்.
மேலும் முக்கியமாக, புதுடில்லியின் மனோநிலை எவ்வாறு உள்ளது? அரசியல் தலைவர்கள் எதனை வலியுறுத்தினர்? எனவும் ஜனாதிபதி கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விவரமாக விளக்கமளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் ஆதரவு உணர்வலைகள் தீவிரமடைகின்றன எனவும் தமிழக முதலமைச்சரால் கூட இதனைத் தடுத்து நிறுத்த முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் என அறியவந்துள்ளது.
அதேவேளை, தமிழ்நாட்டில் காணப்படுவதுபோல புதுடில்லியில் யுத்தநிறுத்தத்திற்கான அழுத்தங்கள் எவையும் காணப்படவில்லையென்று குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பேசவேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி வன்னியில் இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்புக் குறித்து அதிகம் வலியுறுத்தினார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: http://www.tamilwin.com/view.php?20IWnz20eHj0g2ebiG7N3bdF9E84dc82h3cc41pO2d42oQH3b02PLS3e